புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண், குழந்தைகளை கொன்று தற்கொலை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்டார்.

மயிலாடுதுறை அருகே வடமட்டம் பஜனைமடத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹாரிப் என்பவர் துபாயில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிலோபர் பர்வீன் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிகளுக்கு அப்ரினா, அப்ரா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலைபார்ப்பதால், நிலோபர் பர்வீன் தனது மாமியார் மற்றும் இரு குழந்தைகளுடன் வடமட்டத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நிலோபர் பர்வீனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது அவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நோயின் தாக்கம் அதிகமானதால், மனமுடைந்த நிலோபர் பர்வீன் தனது வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டு, தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷத்தைக் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் விஷம் அருந்தியுள்ளார்.

கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அவரது மாமியார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, நிலோபர் பர்வீனும் அவரது இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து, பாலையூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலோபர் பர்வீன் மற்றும் அவரது இரு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Exit mobile version