புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி படித்துறையில் புனித நீராட விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என நெல்லை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது. இதனால், நெல்லையில் உள்ள தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை ஆகிய இடங்களில் புனித நீராடத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதியும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டுமே தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், படித்துறை பகுதியில் அனுமதித்தால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் படித்துறையில் விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து, வரும் 8 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.