சமீப காலமாக ரயில்களில் பயணம் செய்யும் பெண்களை ஈவ்டீசிங் செய்வது, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தற்போதுள்ள சட்டப்படி, அதிகபட்சமாக ஒராண்டு சிறைத்தண்டனை தான் இதற்கு கிடைக்கும்.
சமீபத்தில் ராஜ்யசபாவில், ரயில்வே அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 2014- 16 காலகட்டத்தில், ரயிலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக 2014 ல் 448 வழக்குகளும், 2015ல் 553 வழக்குகளும் 2016ல் 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்வது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தனர். இதன்படி, பெண் பயணிகளிடம் ஈவ்டீசிங், சில்மிஷத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பரிந்துரை ஏற்கப்பட்டால் ஆர்.பி.எப் போலீசாரே நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post