புதிய தூய்மை இந்தியா திட்டம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

‘தூய்மையே உண்மையான சேவை’ என்ற பெயரில் புதிய தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று (செப். 15) காலை 9.30 மணியளவில் டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்தத் திட்டம் இன்று (செப். 15) 4வது ஆண்டை நிறைவு செய்வதையொட்டி, இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைவரையும் வணங்குவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதையடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதும் உள்ள 18 இடங்களிலிருந்து, பள்ளிக் குழந்தைகள், ராணுவ வீரர்கள், ஆன்மீக தலைவர்கள், பால் மற்றும் விவசாய கூட்டுறவு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அரசாங்க பிரதிநிதிகள், ரயில்வே ஊழியர்கள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் உரையாற்றினார்.

புதிய தூய்மை இந்தியா திட்டத்தையொட்டி, வரும் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இது புதிய தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஸ்வச்தா சாபாஷ், சேவா திவாஸ், ரயில்வே ஸ்வச்தா திவாஸ், அந்த்யோதயா திவாஸ் உள்ளிட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என பிரதமர் குறிப்பிட்டார். சுமார் 2 லட்சத்து 50,000 கிராம பஞ்சாயத்துப் பள்ளிகளில் தூய்மை கிராம சபை இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் பதிவுபெற்ற 10 லட்சம் மருத்துவர்கள் சுகாதார மருத்துவ முகாம்களையும், முதன்மை சுகாதார மையங்களில் பணியாற்றும் 9 லட்சம் செவிலியர்கள் சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version