புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் நடந்த முறைகேடு புகார் தொடர்பான விசாரணை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆணையத்தின் பொறுப்பிலிருந்து நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய நீதிபதியை நியமிப்பதில் அரசின் முடிவு குறித்து பதிலளிக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு, மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்தப் புகார்கள் தொடர்பான விசாரணை மற்றும் ஆவணங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆணையத்தை புதிய நீதிபதியை நியமித்துப் புதுப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்த நீதிபதி, உயர் நீதிமன்றம் ஆணையத்திற்கு எதிரானது அல்ல என்றும், நியாயமான பிரச்சனைகளுக்கு ஆணையம் அமைக்கலாம் என்றும் தெரிவித்தார்.