டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்தநிலையில், பிரதமர் மோடியை அவர் இன்று சந்தித்து பேசினார்.
பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த அவர், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். மதுரை அருகே தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்குமாறு பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.
பேரிடர் நிவாரண நிதிக்கான நிதியை தமிழகத்துக்கு உடனே வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். பேரறிஞர் அண்ணா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.
தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனிருந்தார்.
Discussion about this post