பாரத் பந்த்தா அல்லது பாரத ரத்னாவா? என்றால் திமுக பாரத ரத்னா என்றே சொல்லும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சிப்பதாக மீண்டும் கூறினார் . காங்கிரஸ் நடத்திய பாரத் பந்த்தில் திமுக கலந்து கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசை எதிர்த்து போராட திமுகவுக்கு தைரியமில்லை என்றார்.
2014 மக்களவைத் தேர்தலின்போதே திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க முயன்றதாகவும் அப்போது பாஜகவில் சில தலைவர்கள் எதிர்த்ததால் பாஜக -திமுக கூட்டணி ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவாக வாக்களித்தது. அப்போது, திமுகவைச் சேர்ந்த கனிமொழி, ஆர்.எஸ் பாரதி ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை . இதற்கு காரணம் திமுக, பாஜகவுடன் கூட்டணியை விரும்புவதே என்று தெரிவித்தார்.
பாரத் பந்த்தா? அல்லது பாரத ரத்னாவா என்றால், திமுக பாரத ரத்னா விருதையே விரும்புகிறது என தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.