பாபர் மசூதி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
நாடு முழுவதும் மிகுந்த ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்குகிறது. உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான வழக்கில், அயோத்தி நிலத்தை 3 பிரிவுகளாகப் பிரித்து, அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக, இந்த வழக்கில் தொடர்புடைய 3 தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக, கடந்த 1994ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இஸ்லாம் சமூகத்தினர் நமாஸ் செய்வதற்கு ஏற்ற இடம் மசூதி இல்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி அப்போதே, 20 இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவது குறித்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளன. இந்த வழக்கு அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் துணை வழக்கு என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.