முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நீதிமன்ற அமர்வுகளில் விசாரணைகளை நேரலை செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஸ்வப்னில் திரிபாதி என்ற சட்டப்படிப்பு மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதேபோன்று, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை நடவடிக்கைகளை விடியோவாகப் பதிவு செய்து, பொதுமக்களுக்கும், வழக்குதாரர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த அனைத்து மனுக்களையும் ஒரே வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.
அதில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்வது தொடர்பாக போதிய விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிக முக்கியமான வழக்குகளின் விசாரணைகளை மட்டும் நேரலையாக ஒளிபரப்பு செய்யலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.