சென்னையில் கனமழை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் 15 பேர் நியமிக்கப்பட்டு இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளில் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளில் குறிப்பாக அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரத்து 200 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் அந்தப் பகுதியில் குடியிருக்கும் 12 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். இந்தப் பணிகள் தரமாகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவுப்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அலுவலக ஆய்வு மற்றும் நிவாரண பணிகளை அவர்கள் தொடங்க இருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.