நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இணைய தளம் மற்றும் செயலியையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். அதிமுகவின் கொள்கைகளையும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் லட்சியங்களையும் விளக்கிடும் வகையில், நியூஸ் ஜெ தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. செய்தி தொலைக்காட்சி, பொழுது போக்கு தொலைக்காட்சி, இசை தொலைக்காட்சி என மூன்று பிரிவுகளில் இவை செயல்பட உள்ளன.
அதன்படி, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ அறிமுகம், இணையதளம் மற்றும் செயலி தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்த, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி இருவரும் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், சரோஜா, சபாநாயகர் தனபால், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி, அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னணி நிர்வாகிகள் மதுசூதனன், பொன்னையன், வைத்திலிங்கம், கே. பி. முனுசாமி ஆகியோருக்கு, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சி.வி. ராதாகிருஷ்ணன் பூச்செண்டு அளித்து வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் வண்ணமிகு விழா இனிதே தொடங்கியது.
வரவேற்பு நிகழ்த்திய நியூஸ் ஜெ. தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சி.வி. ராதாகிருஷ்ணன், விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளை வரவேற்றார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களையும் அவர் வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மதுசூதனன், பொன்னையன், வைத்திலிங்கம், கே. பி. முனுசாமி ஆகியோர், மங்கல வாத்தியங்கள் முழங்க குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
பின்னர், துணை முதலமைச்சரும், முதலமைச்சரும், விழாப் பேருரையாற்றி, நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இணையதளம் மற்றும் செயலி சேவையை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கைவிரல்களை பதித்து தொடங்கி வைத்தனர். நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோவை இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் ஒரு கோடி மரம் நடும் பசுமை மாரத்தான் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதற்கட்டமாக 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக 5 குழந்தைகளுக்கு மரக் கன்றுகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழங்கினர். இந்நிகழ்வில் நியூஸ் ஜெ நிர்வாக இயக்குநர் சி.வி. ராதாகிருஷ்ணன், நிர்வாகப்பிரிவு தலைவர் தினேஷ் குமார், தலைமைச் செய்தி ஆசிரியர் சுசி. திருஞானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் கொள்கைகளை விளக்கும் காட்சி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கண்களுக்கும், கருத்துக்கும் விருந்து படைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இணைய தளத்தினை Google Play மற்றும் App Store-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.facebook.comnewsjtamil, www.twitter.comnewsjtamil, www.instagram.comnewsjtamil போன்ற சமூக வலை தளங்களிலும் கண்டு மகிழலாம்.