காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை அண்மைக்காலமாக திமுக கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரி அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் நிரந்தர ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கப்படுவதில்லை என கூறியுள்ளார்.
நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களைப் போராட்டத்திற்கு தள்ளிய அரசு, அவர்களை அலைக்கழித்து வருவதை திமுக கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு மற்ற விஷயங்களில் மெத்தனமாக இருப்பது போல், இந்த விவகாரத்தில் இருக்காமல், அரசுப் பள்ளிகளுக்கு நிகராக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு சலுகைகள் மற்றும் உரிமைகள் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
நிலுவை சம்பளம் வழங்க முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை திமுக தலைமையேற்று நடத்தும் என்றும் சிவா தெரிவித்துள்ளார்.