ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், அறிவித்த இரண்டே நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டம் நடைபெறுவதை ஸ்டாலின், தினகரன் போன்றோர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். இலங்கை தமிழர்களுக்காக பேசிக்கொண்டிருந்த தலைவர்கள் தற்போது வாய்திறக்காததை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு, இறுதிக்கட்ட போரில் திமுக, காங்கிரஸ் உதவியதாக ராஜபக்சே கூறியதுதான் காரணம் என்று அவர் தெரிவித்தார். தம்மை பார்த்து திமுக பயப்படுவது ஏன் என்று வினவிய அவர், அமைச்சர் தங்கமணிக்கும், தமக்கும் பிரச்னையை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார்.
ஆனால் இருவரும் அண்ணன், தம்பி போன்று பழகிவருவதாக அவர் தெரிவித்தார். 19 நாட்களில் ஆட்சி பறிபோகும் என்றார்கள், ஆனால், ஒரு வருடத்தைக் கடந்து வெற்றிகரமாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சர் வேலுமணி கூறினார்.
போர்க்குற்றத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கோவை அதிமுக-வின் கோட்டை என்று குறிப்பிட்ட அமைச்சர், கோவையில் 4 கல்லூரிகள் கொண்டுவந்துள்ளதாகக் கூறினார். தாம் விட்ட சவாலை ஸ்டாலின் இதுவரை ஏற்கவில்லை என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
Discussion about this post