தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு – விஜயகாந்த் பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் விஜயகாந்த் பதிலளிக்க எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ள பாதிப்புகளை மத்திய நிபுணர்கள் குழு 2016 ஆம் ஆண்டு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதை மேற்கோள் காட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை வெள்ளம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற தலைப்பில்,
சென்னையில் போதுமான வடிகால்கள் அமைக்கப்படாதது மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பில்லாமல் திறந்து விடப்பட்டதே காரணம் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

குறிப்பாக, வெள்ளத்திற்குக் காரணம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு சார்பில், விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

Exit mobile version