தமிழகத்திற்கு ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக பொதுப்பணித்துறை முடுக்கி விட்டுள்ளது.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 15 பெரிய அணைகள் நிரம்பி உள்ளன. இவற்றுடன், ஏரி- குளங்களும் நிரம்பி உள்ளதால், கனமழையின் போது கரை உடைப்பு எதுவும் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாக, பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
செயற் பொறியாளர்கள் தலைமையில் பொறியாளர்கள் அணையின் பாதுகாப்பை கண்காணிக்க வேண்டும் என்றும், அணைக்கு வரும் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தின் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணை நிரம்பினால், செயற்பொறியாளர்கள் பாதுகாப்பு கருதி, நீர் திறந்து விடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்வதற்கு அனைத்து மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் இருப்பதாகவும், தமிழகத்தில் அவசரக் கால நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.