தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறப்பது ஏன் தெரியுமா?

கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அந்த மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 54 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள முக்கிய அணைகளாக கருதப்படும் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர் அனைத்தும் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து தமிழகத்திற்கு நேற்று வினாடிக்கு 39 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய  இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு இன்று  வினாடிக்கு 54 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய  நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

கூடுதல் நீர் வருவதால், ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 2வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன்காரணமாக பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதித்துள்ள தடையை  தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நீடித்துள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version