மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 364 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா – மேற்கிந்தியத் தீவு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலுடன், அறிமுக வீரர் ப்ரித்வி ஷா களமிறங்கினார். இதில், ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ப்ரித்வி ஷா, நிதானமாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
இதனை அடுத்து, புஜாரா 86 ரன்களிலும், ப்ரித்வி ஷா 134 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி, அரைசதம் கடந்தார். இதனால், முதல் நாள் போட்டி முடிவில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. விராட் கோலி 72ரன்களுடனும், ரிஷப் பந்த் 17ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.