அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தினர்.
4 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரிட்டன் சென்றுள்ளார். அவருக்கு, அந்நாட்டு அரசு சார்பில் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இங்கிலாந்து ராணி எலிசெபத்தை டிரம்ப் சந்தித்தார்.
இந்தநிலையில், டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ரபால்கர் சதுக்கம் அருகே லட்சக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தினர். வெளிநாட்டினருக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடு, வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பு உள்ளிட்ட டிரம்ப் அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், டிரம்ப்பை திரும்பிபோக வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். டிரம்பை விமர்சிக்கும் விதமாக பேபி டிரம்ப் எனும் பலூனை பறக்கவிட்ட அவர்கள், பெண்களுக்கான உரிமைகளை அவர் மறுப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தநிலையில், தற்போது டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.