சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டபோதிலும், அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்தை அணுகவில்லை என அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையம் முன்பு ஆஜரான அப்போலோ ஐ.சி.யூ. மருத்துவர் செந்தில்குமாரிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜெயலலிதா கண் விழித்ததாகவும், தன் உடல் நிலை குறித்த தகவலை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என அவர் கூறியதாகவும், செந்தில்குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஜெயலலிதா விருப்பப்படிதான் மருத்துவ அறிக்கை கொடுக்கப்பட்டதாகவும், அவர் விருப்பப்பட்டால் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அதுதொடர்பாக நிர்வாகத்தை அணுகவில்லை எனவும், அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 4ஆம் தேதி விசாரணை ஆணையம் தரப்பில் செந்தில்குமாரிடம் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது.