இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 20 ஓவர் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதன்படி, இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நாட்டிங்காம் நகரில் இன்று முதல் நடைபெறுகிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், 20 ஓவர் தொடரில் அசத்தியது போலவே, ஒருநாள் தொடரிலும் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மகிந்திரசிங் டோனி, இன்னும் 33 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டியில், 10 ஆயிரம் ரன்களை கடக்கும் வீரர் என்ற சாதனையை புரிவார்.
இதனிடையே, சொந்த மண்ணில் 20 ஓவர் போட்டி தொடரை பறிகொடுத்த இங்கிலாந்து அணி, பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடும் என்பதால், இன்றைய போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே மைதானத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மாதம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.