இந்திய அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். சென்னையில் அஞ்சலக வங்கி கிளையை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அஞ்சல்துறை வட்ட முதன்மை தலைவர் எம்.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், அரசின் மூலம் தரப்படும் உதவித் தொகையோ அல்லது கடனோ நடுவர்கள் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக சென்றடையவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சுங்கச்சாவடி கட்டணம் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்காக, அதனை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரும்படி மத்திய அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.