சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பெட்ரோல், டீசல் விலையேற்றம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசித்தார்.  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு, 1988ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார். மக்களுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளால் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், அவரது நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடி வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர், இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர், சமூக மாற்றங்களுக்கு வழி வகுத்தவர் எம்.ஜி.ஆர். என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழிக்கு அரும் தொண்டாற்றியவர் என்ற பெருமைகளுக்கு உரியவர் எம்ஜிஆர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை நினைவு கூர்ந்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அவற்றை பிற மாநிலங்கள் பின்பற்றி வருவதாக கூறியுள்ளார்.

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version