கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த சூளகிரியில் வட்டார வள மையத்தில், ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றி வருபவர் செந்தில். இவர் தனது மனைவி வித்யலட்சுமி மற்றும் 4 வயது மகன் தரஸ்வின் ஆகியோரோடு சூளகிரி விஐபி நகரில் வசித்து வருகிறார்.
இவர்களது மகன் தரஸ்வின் மூன்று வயதில் இருந்தே மற்ற சிறுவர்களை காட்டிலும் சுறுசுறுப்பாகவும், திறமையானவனாக இருந்ததால், அவனை ஏதேனும் விளையாட்டு பயிற்சிகளில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்களது குடியிருப்புக்கு மிக அருகாமையில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் பயிற்சியளிக்கப்படுவதை அறிந்த செந்தில் – வித்யலட்சுமி தம்பதிகள், பவித்ராமன் என்கிற சிலம்பாட்ட பயினற்றுனரிடம் மூன்றரை வயது சிறுவனான தரஸ்வினை சேர்த்துள்ளனர்.
துருதுருவென கற்கும் ஆர்வத்துடன் இருந்த தரஸ்வினின் மீது அதிகம் கவனம் செலுத்திய பயிற்சியாளர், அவனுக்கு சிலம்பக்கலையில் தீவிர பயிற்சியளித்துள்ளார்.
வயதிற்கு அதிகமாகவே சிலம்பத்தைக் கற்றுத்தேர்ந்த தரஸ்வின் கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடமும், ஈரோட்டில் நடைப்பெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம், தேசிய அளவிலான போட்டியாக கோவாவில் நடைப்பெற்ற சிலம்பத்திலும் முதல் பரிசையும் வென்று குவித்துள்ளான்.
மேலும், சேலத்தில் உலக அளவிலான சிலம்ப போட்டியிலும் முதல் பரிசு மற்றும் தங்கத்தையும் தட்டி வந்த தரஸ்வினை, அனைவரும் வியந்து பாராட்டினர். இதனையடுத்து, தரஸ்வினின் சிலம்பட்டாத்தை சாதனையாக அங்கீகரிக்கும்படி, இந்தியன் புக் ஆப் ரெகார்ட் என்கிற சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட இந்திய புக் ஆப் ரெக்கார்டு, சிறுவன் தரஸ்வினின் சிலம்பாட்டத்தை பார்வையிட்டு அதனை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுவன் தரஸ்வினின் சாதனையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும் நேரில் வந்து பாராட்டினார்.
4 வயதிலேயே உலகளவில் சிலம்பாட்டத்தில் சாதனைப் படைத்துள்ள சிறுவனுக்கு அரசு மேலும் உதவிகளை வழங்க முன் வர வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.
Discussion about this post