சிசிடிவியால் திமுகவிற்கு வந்த இன்றைய சோதனை!

கோவை அருகே அமைச்சரின் பெயர் பொறித்த விளம்பர பேனர் ஒன்றை திமுக பிரமுகர் ஒருவர் கிழித்து எறிந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  பேரூர் பகுதி, எல்ஐசி காலனியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை கடந்த மே மாதம் 30-ந் தேதி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பெயர் பொறித்த விளம்பர பலகையும் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி ஒன்றில் அந்த விளம்பர பலகையை மர்மநபர் ஒருவர் யாரும் பார்க்கவில்லை என்று கருதி கிழித்து எறியும் காட்சி பதிவாகி உள்ளது.

விசாரணையில் அந்த நபரின் பெயர் விக்னேஷ் என்பதும், திமுகவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்யவேண்டும் என எல்ஐசி காலனியைச் சேர்ந்த மோகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

தகவலறிந்த விக்னேஷ் தலைமறைவாகி விட்டார். சமீபகாலமாக திமுகவினர் பல்வேறு அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருவதும், அவை சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இணையதளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிரியாணி கடையில் கலாட்டா, பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கியது, பேன்சி ஸ்டோர் உரிமையாளரை செருப்பால் அடித்தது போன்ற திமுகவினரின் அட்டூழியங்களின் வரிசையில் பேனரை கிழித்த திமுக பிரமுகர் விக்னேசும் இணைந்துள்ளார்.

Exit mobile version