கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ் – விஜய் கூட்டணியில் சர்கார் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இவர்களுடன் ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் முருகதாஸ், படக்குழுவினருக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளார்.
அதாவது, துணை நடிகர் யாரும் தங்கள் அனுமதியின்றி பேட்டி அளிக்கக் கூடாது என்றும் மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
பலரின் கடின உழைப்பால் சர்கார் படம் உருவாகியுள்ளது; படத்தில் நடிக்கும் பல துணை நடிகர்கள் பேட்டியளித்து வருவது முறையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்கார் படத்தில் நடித்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் முக்கிய பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் பேட்டி அளித்தால் கூட திரைப்படத்தின் கதை வெளியாகி விடும் என்று கூறலாம்.
ஆனால், துணை நடிகர்களை மற்றும் குழுவினர்களை கட்டுப்படுத்துவது முறையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய சூழலில் திரைப்படம் வெளியான முதல் காட்சி தொடங்கிய 10 நிமிடத்திலேயே படத்தின் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் அவர்களின் கருத்திற்கேற்ப புகுத்தி விடுகின்றனர் .
இதை கருத்தில் கொண்டு இயக்குனர்கள் தனது படைப்பின் மீது நம்பிக்கை வைத்து செயல் பட வேண்டும்.