சபரிமலை கோயிலுக்கென தனிப் பாரம்பரியம் இருக்கிறது அதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று சபரிமலைக் கோயில் தலைமைத் தந்திரியும், பந்தளம் அரச குடும்பத்தினரும் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் அதேசமயம், சபரிமலைக் கோயிலின் பாரம்பரியம், கலாச்சாரம் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று சபரிமலை கோயிலின் தலைமை தந்திரி ராஜீவரு கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் ஆலோசித்து முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்களும் வழிபாடு செய்ய வரலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேதனை அளிப்பதாக பந்தளம் அரச குடும்பத்தின் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் வர்மா கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பினால் நூற்றாண்டுகாலமாக கோயிலில் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரியங்கள் மாற்றப்பட்டுள்ளது வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கென தனியாகப் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் இருக்கிறது, அதை மறந்துவிடக்கூடாது என அவர் கூறியுள்ளார்.