சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு திடீரென பின் வாங்கி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால், அதை அரசு எதிர்க்காது என்று அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படும் என்று கேரள அரசு தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், முதலமைச்சர் பினராயி விஜயனை நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பத்மகுமார், ஆசாரங்களில் நம்பிக்கை உள்ள பெண்கள் கோயிலுக்கு வரமாட்டார்கள் என்றும், பக்திக்கு அப்பாற்பட்ட எந்த செயலையும் தேவசம்போர்டு மேற்கொள்ளாது என்றார். தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து 3-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், இதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை கேரள அரசு எதிர்க்காது என்று கூறினார். அரசின் நிலைப்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு மீது திணிக்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.