ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் வாலிநோக்கம் அருகே உள்ளது மேலக்கிடாரம் கிராமம். இந்த கிராமத்தில் உய்யவந்த அம்மன் மற்றும் திருவடி அய்யனார் கோயில்கள் உள்ளது. இங்கு அம்மனுக்கு சிலை கிடையாது. பீடம் மட்டுமே உண்டு. உய்யவந்தன் அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழாவும், அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இதனால் கடந்த சில வருடங்களாக இக்கோயிலில் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த கோயிலில் முதலில் விபூதி வாங்கும் உரிமை யாருக்கு என்பதில் தான் பிரச்சனையே.
இந்நிலையில், ஒரு தரப்பினர் விட்டுக்கொடுத்ததால், கோயிலில் விழா நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இது தொடர்பாக ஆய்வுசெய்து கோயிலை திறந்து வைக்க கடலாடி வட்டாட்சியர் முத்துக்குமார் உய்யவந்த அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலை திறக்க முற்பட்டபோது, அவர் மீது சாமி அருள் வந்து ஆடியுள்ளார்.
அங்கு கூடியிருந்த பெண்கள் குழவை சத்தம் எழுப்பியபடி இருந்தனர். அங்கிருந்த சில பெண்களுக்கும் சாமி வந்து ஆடினர். மஞ்சள் கலந்த பாலினை பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கொடுத்தனர். அதனை கோயிலுக்குள் தெளித்த வட்டாட்சியர் முத்துக்குமார் சாந்தமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இந்நிகழ்வு அப்பகுதி பொதுமக்கள் இடையே பக்தி கலந்த பரவசத்தை ஏற்படுத்தியது. மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு தங்கள் கிராமத்தில் உள்ள பழமையான அம்மன் கோவில் மீண்டும் வழிபாட்டிற்கு வந்ததால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Discussion about this post