எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் 30ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பொதுமக்கள் விழாவில் திரளாக கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அவரது சாதனைகளை எடுத்துக் கூறும் வகையில், 31 மாவட்டங்களில் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாக்களில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திட்டப் பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அவர், அந்தந்த மாவட்டத்துக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.அதன் அடிப்படையில், 31 மாவட்டங்களில் 5 ஆயிரத்து 140 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.5 ஆயிரத்து 747 கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.
5 ஆயிரத்து 464 கோடியே 79 கோடி மதிப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 392 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 547 புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா சென்னையில் 30ம் தேதி சிறப்பாக நடைபெற இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 30ம் தேதி மாலை 3.30 மணியளவில் இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற இருப்பதாகவும், எம்ஜிஆரின் திருவுருவப் படத்தினை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிடும் முதலமைச்சர், எம்.ஜி.ஆருடன் திரைத் துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தா, உள்ளிட்ட அனைவரையும் கவுரவிக்க உள்ளார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிடும் முதலமைச்சர் பழனிசாமி, தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவித்தும், காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் பாராட்டு தெரிவிக்கிறார்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா பேருரையாற்றுவார்.
இந்த விழாவுக்கு சட்டப் பேரவைத் தலைவர் தனபால் தலைமை வகிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார்.
நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, மக்களுக்கு ஆற்றிய சமூகத் தொண்டு, சீர்திருத்தங்கள், மக்கள் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், 31 அரசு துறைகளின் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
எம்ஜிஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொள்ள இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.