பிரதமர் மோடிக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. அதன்படி பிரதம அலுவலகம், பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், பிரதமர் மோடியிடம் கடந்த ஆண்டு ஒரு கோடியே 49 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கையிருப்பு இருந்த நிலையில், இந்தாண்டு 50 ஆயிரத்திற்குக் குறைவாக ரொக்கப் பணம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 48 ஆயிரத்து 944 ரூபாய் மட்டுமே அவரிடம் கையிருப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, காந்திநகர் பாரத ஸ்டேட் வங்கியில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 690 ரூபாய் உள்ளன. மற்றொரு பாரத ஸ்டேட் வங்கியில் 1.7 கோடி ரூபாய் உள்ளன. மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்குச் சொந்தமாக காரோ, பைக்கோ கிடையாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
அதேபோல், கடந்த 2002 ஆம் ஆண்டு காந்தி நகரில் பிரதமர் மோடி, 1.30 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார் என்றும், அதனுடைய தற்போதைய சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடியிடம் 1.38 லட்சம் மதிப்புடைய 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பிரதமர் மோடியின் முதலீடு மற்றும் சொத்து மதிப்பு 2 கோடி 28 லட்சம் ரூபாய் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.