வரலாறு காணாதளவில் பெய்த கனமழையால் கேரளா பெரும் சேதத்தை சந்தித்தது. மழை வெள்ளத்தில் சுமார் 493 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. 4700 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசிடம் கேரளா அரசு கோரியது. முதற்கட்டமாக 600 கோடி ரூபாயை மத்திய அரசு அளித்தது.
இந்தநிலையில், மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு மதிப்பீடு செய்கிறது. உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் பி.ஆர்.சர்மா தலைமையிலான 11 பேர் கொண்ட குழு, கேரளாவில் மழை வெள்ள சேத மதிப்பை கணக்கிடும் பணியை தொடங்கியுள்ளது. இந்தக் குழு வரும் 24ஆம் தேதி வரை மதிப்பீடு பணியை மேற்கொள்ள உள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் மத்திய குழுவிடம் சேத விவரங்களை வழங்க உள்ளனர்.
வரும் 24ஆம் தேதி டெல்லி செல்லும் முன்பு, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்த உள்ளது.