கேரளாவில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், எலிக்காய்ச்ல் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு ஆளாகினர். இதையடுத்து சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு நெருக்கடி நிலையைக் கேரளா சந்தித்துள்ளது. மழைவெள்ளம் வேகமாக வடிந்ததையடுத்து, தற்போது வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் அனைத்தும் பயன்படத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக விவசாய நிலங்களில் உள்ள மண்புழுக்கள் போன்ற மண்ணுயிர்கள் அனைத்தும் வழக்கத்திற்கு மாறாக மடிந்து வருவது கவலையை அளிக்கிறது.
குறிப்பாக வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் மண்புழுக்கள் உயிரிழப்பு அதிக அளவில் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநில அரசும், மண்வள ஆராய்ச்சி நிபுணர்களும் இதுகுறித்து தகவல்களை திரட்டி வருகின்றனர்.
மண்வளத்தைப் பாதுகாக்கும் மண்புழுக்கள் உயிரிழப்பால் மண்ணின் தன்மையே மாறியிருப்பதாகவும், மண்ணில் கரிமபொருட்களின் சதவீதம் குறைந்துள்ளதாகவும், நீரைதேக்கி வைக்கும் அளவும் மாறுபட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மழை குறைந்தவுடன் பகல்நேர வெப்பநிலை 22 டிகிரியிலிருந்து 29 டிகிரியாக அதிகரித்ததே மண்ணுயிர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரள மக்கள் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.