காந்தியின் வழியைப் பின்பற்றி குழந்தைகள் அனைவரும் வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேச தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சத்தியாக்கிரக அறநெறி போராட்டத்தின் மூலம், விடுதலை பெற்றுத் தந்த புன்னியாத்மா காந்தியடிகள் எனப் புகழாரம் சூட்டினார்.
காந்தி, மேல் நாட்டு உடைகளை அறவே தவிர்த்து, இந்திய உடைகளையே அணிய வேண்டும் என முடிவெடுக்க வைத்து திருப்புமுனை ஏற்படுத்திய மாநிலம் தமிழகம் என்றும் பெருமையோடு நினைவு கூர்ந்தார். காந்தி, கடந்த 1921 ஆம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேட்கொண்டபோது,
மதுரையில் அவர் வழி நெடுக கண்ட காட்சி அவர் உள்ளத்தைத் தைத்தது என்றும், கிராமப்புற ஏழை மக்கள் ஒரே ஒரு கோவணத்தை கட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்த அவர், அன்று முதல் ஒரே ஒரு வேட்டியை மட்டும் தான் கட்டிக் கொள்ள முடிவு செய்தார் என்றும் சுட்டிக்காட்டினார். அந்தப் பெருமை தமிழகத்தையே சேரும் என்றும் குறிப்பிட்டார். மேலும், விளையாட்டுக்குக் கூட பொய் சொல்ல கூடாது எனக் குழந்தைகளிடம் எடுத்துரைத்தவர் காந்தி என்றும்,
அவரின் கொள்கைகளை பின்பற்றித் தான் மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களும், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களும் தாங்கள் நடித்த படங்களில் குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை எடுத்துரைத்தனர் என்பதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன், காந்தியின் வழியைப் பின்பற்றி குழந்தைகள் வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.