புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுவதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மோடி அரசின் ஊழல்களை காங்கிரஸ் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, அவர் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருவதாக திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார். கிரண்பேடியின் போக்கை காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தெரிவித்த அவர், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சி செய்தால், அதை தடுக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்றும், நடிகர் விஜயை அரசியலுக்கு வரவேற்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்