சென்னை கால் டாக்சி டிரைவர் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தாம்பரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் கால்டாக்சி ஓட்டுனராக பணியாற்றி வரும் விக்னேஷ், நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் காரில் கடத்தப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து போரூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விக்னேஷை கடத்திச் சென்ற கார் தாம்பரம் அருகே சென்று கொண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்தக் காரை தாம்பரத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்த விக்னேஷை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், விக்னேஷ் வேலை பார்த்த கால்டாக்சி நிறுவனத்தில் உடன் பணிபுரியும் கெளதம் என்பவர் தான், தன் நண்பர்கள் மூலமாக விக்னேஷைக் கடத்தியது தெரியவந்தது. கெளதமின் தங்கைக்கு விக்னேஷ் எஸ்.எம்.எஸ் மற்றும் பேஸ்புக் மூலமாக அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும், இதனால் விக்னேஷைக் கடத்தியதாகவும் தெரியவந்தது. இதனிடையே, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மாரிமுத்து, கௌதம், முருகன், ராஜா, சிவா ஆகிய 5 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், கடத்தல் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Discussion about this post