திமுக தலைமையின் தொடர் புறக்கணிப்பால் கனிமொழி ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். அழகிரியை போன்று, ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்க அவர்கள் தயாராக இருப்பதால், திமுகவில் குடும்ப மோதல் வலுத்துள்ளது.
2014ம் ஆண்டு திமுகவில் இருந்து மு.க. அழகிரி வெளியேற்றப்பட்ட பிறகு, தனிக்காட்டு ராஜாவாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அனைத்து மாவட்ட செயலாளர்களும் அவரது ஆதரவாளர்களாக உள்ளனர்.
இந்தநிலையில், கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, போட்டியின்றி திமுக தலைவரானார் ஸ்டாலின். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகிரி முழுமையாக ஓரம் கட்டப்பட்டுள்ளார். ஸ்டாலினுக்கு முழு ஆதரவாளராக கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழி செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கனிமொழிக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திட்டமிட்டு அவரை ஸ்டாலின் உள்ளிட்டோர் புறக்கணித்தது ஆதரவாளர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.
மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுப்பதாக நாடகமாடி வரும் திமுக, முப்பெரும் விழாவில் கனிமொழியை மறந்தது ஏன் என்று, அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கட்சியில் கனிமொழிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவது ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
கனிமொழிக்கு உரிய முக்கியத்துவம் தராவிட்டால் ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அழகிரியை தொடர்ந்து, கனிமொழியும் கலகம் செய்ய வாய்ப்பு இருப்பதால், திமுக தொண்டர்கள் உச்சக்கட்ட குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.