கருப்பு வியாழன் ஆனது இந்திய பங்குச் சந்தை! 

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று காலை 35 ஆயிரத்து 975 புள்ளிகளுடன் வர்த்தகத்தை துவக்கியது. நாள் முழுவதும் சீரான விகிதத்தில் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது.

வர்த்தகத்தின் முடிவில் 806 புள்ளிகள் சரிந்து 35 ஆயிரத்து 169 புள்ளிகளாக முடிவடைந்தது. சென்செக்சைப் பொறுத்தவரை 36000 புள்ளிகள் என்பது பாதுகாப்பான ஒரு பயணம்.

அந்த புள்ளியில் இருந்து கீழிறங்கும் போதே பங்குச்சந்தை பாதாளத்தை நோக்கி பாய்கிறது என்று பொருள். கிட்டத்தட்ட இன்றைய வர்த்தகமும் முதலீட்டாளர்களை கடும் சோர்வுக்கு ஆளாக்கி உள்ளது.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 282 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 575 முடிவடைந்தது.

நிப்டியின் ஆதார புள்ளி என்பது 10 ஆயிரத்து 650 ஆகும். அதிலும் சரிவை சந்தித்துள்ளதால் இன்றைய வியாழன், முதலீட்டாளர்களை பொறுத்தவரை கருப்பு வியாழனாக மாறியுள்ளது.

இந்திய பங்குச்சந்தையின் சரிவுக்கான காரணங்களை பட்டியலிட்டால், ஜப்பானிய நாணயமான யென்-ன்னுக்கு நிகரான டாலரின் மதிப்பு கடந்த 11 மாதங்களை காட்டிலும் அதிகரித்துள்ளது முதல் காரணமாகும். இதனால் அமெரிக்க கருவூல பத்திரங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விளைவு, இந்திய சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

காலமெல்லாம் நமக்கு வில்லனாக இருக்கும் கச்சா எண்ணெயின் விலையேற்றமும் இந்திய பங்குச் சந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய்-யின் விலை 86 டாலராக உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் விலை பேரலுக்கு 100 டாலரை எட்டும் என்று அஞ்சுகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியின் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களும் பங்குச் சந்தைகளை சற்று ஆட்டம் காண வைத்துள்ளது.

Exit mobile version