சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனருமான கருணாஸ், முதலமைச்சர் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், கருணாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.
சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் இல்லத்திற்கு சென்ற அதிகாரிகள், அவரை கைது செய்து, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதேபோல், அவரது அமைப்பைச் சேர்ந்த செல்வநாயகம், கார்த்தி, நெடுமாறன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மூன்று மணி நேர விசாரணைக்கு பிறகு, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பு கருணாஸ் உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணைக்கு பிறகு, கருணாஸ் மீதான வழக்குகளில், கொலை முயற்சி பிரிவை ரத்து செய்த நீதிபதி, அக்டோபர் 5 ஆம் தேதி வரை அனைவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கருணாஸ் உள்ளிட்டோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே கருணாஸ் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே கருணாஸ் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கருணாஸ் உள்ளிட்டோர் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர்.