ஓசூரில் கோயில்களை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் திருக்கோயிலில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 பெரிய கோவில்களிலும், ஆயிரத்து 135 சிறிய கோயில்களிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஓசூர் பகுதியில் உள்ள சந்திர சூடேஷ்வரர் திருக்கோயிலில், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி கலாவதி, தலைமை குற்றவியல் நீதிபதி பாலசுப்பிரமணி, மற்றும் நீதிபதி அறிவொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, அனைத்துக் கோயில்களிலும் 16 வகையான வசதிகள் உள்ளனவா என நீதிபதிகள் ஆய்வு செய்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பக்தர்களின் பாதுகாப்பு, காற்றோட்டமான பகுதி, பிளாஷ்டிக் பயன்பாடு, வாகன நிறுத்தும் வசதி, கழிப்பிட வசதி, வரவு செலவு கணக்குகள், மூத்த குடிமக்களுக்கு தனிவரிசை உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.