ஒடிசாவில் நோயுற்ற மரங்களுக்கு சிகிச்சையளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் நகரில், நோயுற்ற மரங்களுக்கு இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெர்ஹாம்பூர் வளர்ச்சி ஆணையமும், வனத் துறையும் இணைந்து நடத்தும் இந்த சிகிச்சைக்கு, சபுஜ பாஹினி, அஞ்சலிகா விகாஸ் பரிஷத் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன.
பெரும்பாலான மரங்களில் மிகச்சாதாரணமாக ஆணி அறையப்படுகிறது. ரசாயனங்கள் கலந்த போர்டுகள் வைக்கப்படுகிறது. இந்த செயல்களால் துரு மற்றும் ரசாயனங்கள் மரங்களில் கலந்து அவற்றுக்குப் பூஞ்சை நோய்களை ஏற்படுத்துகின்றன. அது மரத்தின் உயிர்ச்சத்தில் நஞ்சாக கலந்துவிடுகிறது. இதனால் மரங்கள் வாடிவதங்கி நாளடைவில் மடிந்து விடுகிறது.
இதையடுத்து மரங்களில் ஆணிகளையும் ஃபிளக்ஸ்களையும் அகற்றும் பணி பெர்ஹாம்பூரில் நடந்து வருகிறது. துளையிடப்பட்ட இடங்களில் மஞ்சள், வேப்பிலை, பசுஞ்சாணம், களிமண் கலந்த கலவை செலுத்தப்படுகிறது. இதனால், மரங்கள் சுயமாக எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டு துளிர்ப்பதாக பெர்ஹாம்பூர் வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.