ஐ.நா.வில் கோரிக்கை வைக்கும் இலங்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இலங்கை சார்பில் புதிய கோரிக்கைகளை வைக்கப் போவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. இதற்கு இலங்கை ராணுவம், கடற்படை மற்றும் அந்நாட்டு காவல்துறையே காரணம் என மாயமானவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வெவ்வேறு காலகட்டங்களில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 73வது கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான பிரதிநிதிகள் குழு பங்கேற்க உள்ளது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு உள்ளது. குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பல்வேறு சலுகைகளை கேட்க உள்ளதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படுவதை தடுத்து, நல்ல நட்புறவையும் உருவாக்க முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்தார். இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு வலியுறுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version