எம்.ஜி.ஆரின் உரைகள் அடங்கிய தொகுப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் எம்.ஜி.ஆரின் உரைகள் அடங்கிய தொகுப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 

பாரத ரத்னா மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. 31 மாவட்டங்களில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒய்எம்சிஏ மைதானத்தில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களை கலைஞர்கள் பாடினர். திரைப்படப் பாடல்களும் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டன. அரங்கில் கூடியிருந்த லட்சக் கணக்கானோர் உற்சாக பெருக்குடன் இருந்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள், தமிழக அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு காணொலி மூலம் விளக்கப்பட்டது.

விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர், மக்களவை துணை சபாநாயகர், பேரவைத் தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்பு உரை நிகழ்த்தினார். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழ்நாடு 50வது ஆண்டு பொன் விழாவை இணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, எம்ஜிஆரின் திருவுருப்படத்தினை ரிமோட் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.அதைத்தொடர்ந்து 18 கோடியே 79 லட்சம் மதிப்பில் 13 திட்டப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி மக்களுக்கு அர்ப்பணித்தார்.

எம்ஜிஆர். நூற்றாண்டு விழா சிறப்பு அஞ்சல் தலையை முதலமைச்சர் வெளியிட துணை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

எம்ஜிஆரின் சட்டமன்ற உரைகளை முதலமைச்சர் வெளியிட, பேரவைத் தலைவர் தனபால் பெற்றுக் கொண்டார்.

எம்ஜிஆரின் எழுச்சிமிகு உரைகளின் தொகுப்பை முதலமைச்சர் வெளியிட, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.

எம்ஜிஆரின் பொன்மொழிகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.

எம்ஜிஆர் அவர்களின் புகைப்பட தொகுப்பை முதலமைச்சர் வெளியிட, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொண்டார்.

Exit mobile version