வள்ளல், பொன்மனச்செம்மல், மக்கள்திலகம் என பல்வேறு அடைமொழிகளில் அழைக்கப்பட்ட அதிமுக நிறுவனர் டாக்டர் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி தமிழக அரசியலின் மைல்கல்லாக இருந்தது. தனது ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்த அவர் தனிநாடு கேட்டு போராடிய ஈழப் போராளிகளை ஆதரிக்கவும் தவறவில்லை.
ஈழ விவகாரத்தில் பல குழுக்கள் இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அமைப்புகளில் உள்ளவர்களை சந்திக்க விரும்பினார். எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப்புலிகள் சார்பாக பாலா, சுப்ரமணியன், சங்கர் உள்ளிட்ட 3 பேர் எம்ஜிஆரை சென்னையில் சந்தித்தனர்.
ஈழ விடுதலைக்காக தன்னால் இயன்ற உதவியை செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர் ஆயுதங்கள் வாங்க 2 கோடி ரூபாய் தேவை என்ற விடுதலைப்புலிகளின் கோரிக்கையை ஏற்று உடனே செய்துதருவதாக உறுதியளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத புலிகள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இது உண்மைதானா என்ற சந்தேகமும் அவர்களுக்கு எழாமல் இல்லை. உறுதியளித்தபடி அந்த தொகையை அவர் வழங்கியதும் எம்ஜிஆர் மீதான விடுதலைப்புலிகளின் நம்பிக்கை பலமடங்கு அதிகரித்தது.
இதன் காரணமாக இரு தரப்பிலும் உறவு நெருக்கமாக, எம்ஜிஆரை அடிக்கடி சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் விடுதலைப்புலிகளுக்கு கிடைத்தது. தன்னை தன் சொந்த சகோதரனாக பாவித்து பழகியதாக கூறிய விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ஈழ பிரச்சினைகளை முழுவதுமாக புரிந்துகொண்டு பண உதவி முதற்கொண்டு எண்ணற்ற உதவிகளை எம்ஜிஆர் புரிந்ததாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஈழத்தில் நடைபெறும் இன விடுதலைக்கான போரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் தேவைபட்டால் எத்தகைய உதவியை செய்ய தான் தயாராக இருப்பதாகவும் எம்ஜிஆர் பிரபாகரனிடம் உறுதியளித்தார். எம்ஜிஆரின் இத்தகைய உதவியைப் பெற்றுகொண்டே விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு இலங்கையில் ஆழமாக வேரூன்றியது. ஆனால் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகான கால மாற்றத்தில் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏறிய திமுக, அரசியல் சுயலாபத்திற்காக ஈழ இறுதிகட்டப்போரில் வாய்மூடி மவுனியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.