எப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று எங்களுக்கு கூறுவதா என உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே 60 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது.
இதையடுத்து இரு மாநிலங்களிலும் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க ,உச்ச நீதிமன்றத்தை அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான கமல்நாத் நாடியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இரு மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் இது குறித்து உத்தரவிட கேட்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையையும், வாக்கு ஒப்புகைச் சீட்டில் தெரிய வரும் எண்ணிக்கையையும் சரிபார்க்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது .
இதையடுத்து இந்த மனு மீது, தேர்தல் ஆணையம் 101 பக்க பதில்மனு ஒன்றினை தாக்கல் செய்தது. அதில் கமல்நாத் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் இடைக்கால நிவாரணம் கோரியுள்ளதை நியாயப்படுத்தும் வகையில் எந்த விதமான வலுவான ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
அத்துடன் நாங்கள் எந்த முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் கூற முடியாது . அதற்காக மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து எங்களது பணிகளில் தலையிட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post