நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக அக்டோபர் 3 ஆம் தேதி எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் சம்மன் அனுப்பி உள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, உயர்நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இந்நிலையில், உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர பரிந்துரை செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன், தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் மனு அளித்தார்.
அதனை விசாரித்த தலைமை வழக்கறிஞர், கிரிமினல் அவதூறு வழக்கு தொடர ஏன் அனுமதி அளிக்கக் கூடாது என்று கேட்டு எச்.ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், இந்த வழக்கில் வரும் 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எச்.ராஜாவுக்குத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.