விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தகாத வார்த்தைகளால் பேசிய எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரைப் பிடிக்க காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து முன்னணி சார்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெறப்பட்டது. இதனால், மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பாக, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார்.
அப்போது, மெய்யபுரம் ஊருக்குள் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல இந்து முன்னணியினர் முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து, ஊருக்குள் விநாயகர் சிலை கொண்டு சென்றால், மத கலவரம் ஏற்படும் என்று கூறி, போலீசார் இரும்பு தடுப்புகள் போட்டு தடுத்து நிறுத்தினர். இதனால், விநாயகர் சிலை ஊர்வலம் வந்தவர்கள், போலீசாருக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, எச்.ராஜா தாம் பேச மேடை அமைக்க வேண்டும் என்றும், ஊருக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தைகளால் திட்டியும், ஒட்டுமொத்த தமிழக போலீசாரை அவதூராக பேசியும் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.
இது தொடர்பாக அவர் ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால், எச்.ராஜாவின் செயலுக்கு, பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த வீடியோவில், தன்னுடைய ஆடியோ டப்பிங் செய்யப்பட்டு, வேண்டும் என்றே பரப்பப்படுவதாகவும், தாம் நீதிமன்றத்தைப் பற்றியும், தமிழக போலீசாரைப் பற்றியும் இதுப்போன்று பேசவில்லை என்றும் எச்.ராஜா, அந்தர் பல்டி அடித்தார்.
இதனிடையே, தடையை மீறி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக, விநாயகர் சிலை ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீதிமன்றம் மற்றும் போலீசார் பற்றி அவதூறாக பேசியதாக எச்.ராஜா, இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 18 பேர் மீது திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தடையை மீறி ஊர்வலம் சென்றது, நீதிமன்றத்தை அவதூறாக பேசியது, பொது இடத்தில் தகாத வார்த்தையால் திட்டியது, அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டுவது, பிற மதத்தினரை புண்படும் வகையில் பேசியது உட்பட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எச்.ராஜாவை கைது செய்ய, காவல் ஆய்வாளர்கள் மனோகரந் மற்றும் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post