உதகைக்குச் சுற்றுலா வந்த வாகனம் மலைப்பாதையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையைச் சார்ந்த 7 பேர் கடந்த 30 ஆம் தேதி உதகைக்குச் சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 1ஆம் தேதி காலை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வாகனத்தில் 7 பேரும் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட தேதியில் ஹோட்டல் அறையை காலி செய்யாததால், சந்தேகமடைந்த ஹோட்டல் மேலாளலர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் அவர்களின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச்ஆப் செய்யப் பட்டிருந்தது. மேலும், அவர்கள் கடைசியாக பேசிய செல்போன் சிக்னலை வைத்துத் தேடியதில், உதகை அருகே உள்ள வனப்பகுதிக்கு அவர்கள் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கல்லட்டி பாதையில் 35வது கொண்டை ஊசி வளைவில் அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி 200 அடி பள்ளத்தில் விழுந்திருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்களை மீட்கும் பணியில் வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
விபத்து நடந்து 3 நாட்கள் ஆனதால், 7 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று எண்ணிய நிலையில், 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.