புரட்டாசி மாத பூஜைக்கு சபரிமலை வரும் பக்தர்கள் உணவு, குடிநீர் இல்லாமல் வரவேண்டாம் என தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால், பம்பை நதி உருக்குலைந்தது. புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், புரட்டாசி பூஜைக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். வரும் திங்கள் கிழமை சபரிமலை நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி தேவசம்போர்டு பக்தர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. உணவு – குடிநீர் கொண்டு வர வேண்டும், காடுகளுக்குள் செல்லக் கூடாது, புதை குழிகள் உள்ளதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்குப் போக கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகளை தேவசம்போர்டு கூறியுள்ளது.