இந்தியாவில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களின் வருகையை பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
சென்னை போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் , தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவர்களுக்கு நவீன தொழில் நுட்பம் கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த அட்டையை அணிந்து கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்த உடனேயே பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜனவரி மாதத்திற்குள் 11வது மற்றும் 12 வது வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 70 ஆயிரம் மடிக்கணிணிகள் வழங்கப்படும் என்றார். நவம்பர் மாதத்திற்குள் மூன்றாயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறக்கப்படும் என்று கூறிய அவர், அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் மானவர்களுக்கு 11 லட்சத்து 70 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக இலங்கையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி வாகை சூடிய மாணவர்களை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுவதாக தெரிவித்தார். அரசு பள்ளிகளில் மாணவர் வருகை பதிவேட்டில் பயோமெட்ரிக் முறை மற்றும் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் முறை ஆகியவற்றை குறித்தும் அவர் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த 7 ஆண்டுகளில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கிய ஒரே அரசு அதிமுக அரசுதான் என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Discussion about this post