ஈ சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஈ சிகரெட் எனும் எலக்ட்ரானிக் சிகரெட் தடை செய்யப்படுவதாக ஜூன் 14ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி கடந்த 3ம் தேதியிட்ட அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஈ சிகரெட்டில் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கொண்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமான நுரையீரல் பிரச்சினை, கர்ப்பிணிக்கும், சிசுவுக்கும் கேடு விளைவிக்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈ சிகரெட் பாதிப்பு குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல், கல்வி, சுகாதாரத்துறைகளைச் சேர்ந்த 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போதைப்பொருளை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பீடி, சிகரெட்டுக்கு இணையாகவும், அதைவிட அதிகமாக பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஈ சிகரெட்டுகள், அவற்றின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், இறக்குமதி, பயன்பாடு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு தமிழகத்தில் தடை விதிப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.